பா.ஜனதாவினர் அவதூறாக பேசியதாக புகார்: மனித உரிமை ஆணையத்தில் மாணவி சோபியாவின் தந்தை ஆஜர்
பா.ஜனதாவினர் மற்றும் போலீசார் மீது புகார் அளித்த மாணவி சோபியாவின் தந்தை சாமி நெல்லையில் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி முன்னிலையில் ஆஜரானார்.
நெல்லை,
பா.ஜனதாவினர் மற்றும் போலீசார் மீது புகார் அளித்த மாணவி சோபியாவின் தந்தை சாமி நெல்லையில் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி முன்னிலையில் ஆஜரானார். அப்போது, விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தி மனு கொடுத்தார்.
மாணவி கைது
தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்தவர் சாமி மகள் சோபியா. ஆராய்ச்சி மாணவியான இவர் கனடா நாட்டில் படித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி இவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தார். அதே விமானத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார்.
அப்போது சோபியா பா.ஜனதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வாக்குவாதமும் ஏற்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபியாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மனித உரிமை ஆணையம்
சோபியாவின் தந்தை சாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சோபியாவை பா.ஜனதாவினர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், போலீசார் பல மணி நேரம் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறி இருந்தார்.
இந்த மனுவை மாநில மனித உரிமை ஆணையம் ஏற்றுக்கொண்டது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் நெல்லையில் கடந்த மாதம் 24-ந் தேதி மனு மீது விசாரணை நடத்தினார். அப்போது மாணவி சோபியா, அவருடைய தந்தை சாமி ஆகியோர் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் ஆஜரானார்கள். சோபியா தரப்பிலும், இன்ஸ்பெக்டர் திருமலை தரப்பிலும் நீதிபதியிடம் எழுத்து மூலமாக வாக்குமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை தொடர்பாக நீதிபதி ஜெயச்சந்திரன் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி சோபியா தனது நேரடி வாக்குமூலத்தையும் அளித்தார். பின்னர் அவர் கனடா சென்றார்.
சோபியாவின் தந்தை ஆஜர்
இந்த வழக்கு நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோபியாவின் தந்தை சாமி ஆஜராகி விளக்கம் அளித்தார். தனது மகளுக்கு போலீசாரால் ஏற்பட்ட மன உளைச்சல் பற்றி விளக்கி கூறினார். மேலும் அவர் ஒரு மனுவை நீதிபதி ஜெயச்சந்திரனிடம் கொடுத்தார்.
அதில், “எனது மகள் சோபியாவை வேறு சில போலீசாரும் விசாரணை என்ற பெயரில் மனஉளைச்சலுக்கு ஆளாக்கினர். அவர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் 27-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். நேற்று மட்டும் 46 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story