கள்ளக்காதலனுடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 2 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் கைது உவரி அருகே பரபரப்பு


கள்ளக்காதலனுடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 2 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் கைது உவரி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 27 Oct 2018 3:30 AM IST (Updated: 27 Oct 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

உவரி அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 2½ வயது குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாயை போலீசார் கைது செய்தனர்.

வள்ளியூர், 

உவரி அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 2½ வயது குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாயை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண்

நெல்லை மாவட்டம் உவரி அருகேயுள்ள குஞ்சன்விளை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மூத்த மகள் மகாலட்சுமி (வயது 25). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்வன் (30) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கன்சிகா (2½) என்ற பெண் குழந்தை உள்ளது. செல்வன் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் தங்கியிருந்து அங்குள்ள மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் செல்வன் தனது குடும்பத்தினருடன் ஊரில் நடந்த திருவிழாவை பார்ப்பதற்காக கடந்த மாதம் 30-ந்தேதி குஞ்சன்விளைக்கு வந்தார். திருவிழா முடிந்ததும் வேலை காரணமாக செல்வன் மட்டும் பெங்களூர் புறப்பட்டு சென்றுவிட்டார்.

திருமணத்திற்கு முன் காதல்

கடந்த 5-ந் தேதி இரவு மகாலட்சுமி தனது குழந்தை கன்சிகாவுடன் வீட்டின் முன்பு படுத்து இருந்தார். திடீரென்று தாயும், மகளையும் காணவில்லை. அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து முருகன் உவரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் காலையில் மகாலட்சுமி தனது குழந்தையுடன் வீட்டிற்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மகாலட்சுமி திருமணத்திற்கு முன்பு அதே ஊரை சேர்ந்த சண்முகவேல் மகன் கதிரவன் என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு கதிரவனின் பெற்றோர் சம்மதிக்காததால், பெற்றோரின் விருப்பத்தின்பேரில் செல்வனை திருமணம் செய்துள்ளார்.

குழந்தைக்கு சூடுவைத்து கொடுமை

தற்போது ஊருக்கு வந்த மகாலட்சுமி தனது குழந்தையை தூக்கிக் கொண்டு கள்ளக்காதலன் கதிரவனுடன் சென்று உள்ளார். அவர்கள் மதுரை, திண்டுக்கல், சென்னை ஆகிய இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை எடுத்து உல்லாசமாக இருந்து உள்ளனர். அப்போது உல்லாசத்துக்கு இடையூறாக அழுது கொண்டிருந்த குழந்தை கன்சிகாவை மகாலட்சுமியும், கதிரவனும் இரும்பு கம்பியால் தாக்கியும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை தொடர்ந்து மகாலட்சுமி ஊருக்கு திரும்பியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து, கொடுமையான ஆயுதம் கொண்டு தாக்கி சூடு வைத்தல், குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் மகாலட்சுமி மீது உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை குழந்தையுடன் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் குழந்தைக்கு தந்தையின் பாதுகாப்பில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து மகாலட்சுமி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story