பழனியில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: சுகாதார பணிகள் இணை இயக்குனர் நேரில் ஆய்வு


பழனியில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: சுகாதார பணிகள் இணை இயக்குனர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 27 Oct 2018 3:15 AM IST (Updated: 27 Oct 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், பன்றிக்காய்ச்சலால் 2 பேர் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக மாநில சுகாதார பணிகள் இணை இயக்குனர் சகாயமேரி ரீட்டா நேற்று பழனிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

பழனி, 

பழனி அருகே உள்ள வில்வாதம்பட்டியை சேர்ந்த ரேஷன் கடை ஊழியரான மணிகண்டன் என்பவர் கடந்த வாரம் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார். அவரைத்தொடர்ந்து பழனி தெற்குரதவீதியில் உள்ள ஆவணி மூலவீதியை சேர்ந்த துரைப்பாண்டி என்பவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழனி பகுதியில் சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாநில சுகாதார பணிகள் இணை இயக்குனர் சகாயமேரி ரீட்டா நேற்று பழனிக்கு வந்தார். பின்னர் தெற்குரத வீதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் திறந்த நிலையில் பாத்திரங்கள், தொட்டிகளில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

பின்னர் நகராட்சி அதிகாரிகளிடம், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் அடிக்கடி சுகாதார பணியாளர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட வேண்டும். கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் யாரேனும் திறந்த நிலையில் தண்ணீர் தொட்டி, பாத்திரங்களை வைத்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் பழனி நகர் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்கள் மீது போடப்பட்டுள்ள தார்ப்பாய்களில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என சகாயமேரி ரீட்டா ஆய்வு செய்தார்.

தொடர்ந்து போலீஸ் குடியிருப்பு பகுதிகள் சுகாதாரமான முறையில் உள்ளதா? என்றும் பார்வையிட்டார். அதையடுத்து பழனி அரசு மருத்துவமனைக்கு வந்த மாநில சுகாதார பணிகள் இணை இயக்குனர், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். பின்னர் பழனியை அடுத்த வில்வாதம்பட்டி, கீரனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று சுகாதார பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கிறதா? என ஆய்வு செய்தார். ஆய்வின்போது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் வகாப், மாவட்ட பூச்சியியல் நிபுணர் காசிம் முஸ்தபா, டாக்டர் வாசிம் மற்றும் சுகாதாரத்துறையினர் உடன் இருந்தனர்.

Next Story