தாராபுரம் ஓடையில் இருந்து மீட்கப்பட்ட பெண் பிணம்: ‘‘சாக்கு மூடையில் இருக்கிற என் மனைவியை கொடுங்க சாமி’’ போலீசாரிடம் கெஞ்சிய துப்புரவு தொழிலாளி


தாராபுரம் ஓடையில் இருந்து மீட்கப்பட்ட பெண் பிணம்: ‘‘சாக்கு மூடையில் இருக்கிற என் மனைவியை கொடுங்க சாமி’’ போலீசாரிடம் கெஞ்சிய துப்புரவு தொழிலாளி
x
தினத்தந்தி 27 Oct 2018 4:00 AM IST (Updated: 27 Oct 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் ஓடையில் இருந்து பெண் பிணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் ‘‘சாக்கு மூடையில் இருக்கிற என் மனைவியை கொடுங்க சாமி’’ என்று தாராபுரம் போலீசாரிடம் கெஞ்சிய துப்புரவு தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம்,

தாராபுரம்–திருப்பூர் சாலையில் நஞ்சியம்பாளையம் அருகே உப்பாறு பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் கிடந்த சாக்கு மூடையில் 35 வயது மதிக்க தக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. மர்ம ஆசாமிகள் அந்த பெண்ணை கொலை செய்து சாக்குமூடையில் கட்டி வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் விரைந்து சென்று சாக்கு மூடையில் இருந்த அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் யார் என்று அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று அவர் உடுத்தியிருந்த சேலை, ஜாக்கெட், கழுத்தில் இருந்து இருந்த தங்கத்தாலி, வளையல், தங்க கம்மல், மோதிரம், ஆகியவற்றை கொண்டு அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகளை கண்டு பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்மணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பெண் நகைக்காக கொலை செய்யப்படவில்லை என்றும், கள்ளத்தொடர்பு காரணமாக அவரை மர்ம ஆசாமிகள் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு 40 வயது மதிக்கத் தக்க ஒருவர் சென்றுள்ளார். அவர், அங்கு நின்ற பயணிகளிடம் செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த தனது மனைவியின் புகைப்படத்தை காண்பித்து ‘‘ அய்யா, கடந்த வாரம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற எனது மனைவியை அதன்பின்னர் காணவில்லை. யாராவது பார்த்தீர்களா? என்று கேட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்களில் சிலர் உனது மனைவியை மூடையில் கட்டியாச்சு, அந்த மூடை தாராபுரம் போலீஸ் நிலையத்தில் உள்ளது. அங்கு சென்று வாங்கிக்கொள் என கிண்டலாக கூறியுள்ளனர். இதையடுத்து மனைவியை சாக்கு மூடையில் வைத்து மர்ம ஆசாமிகள் கடத்தி சென்று விட்டார்கள் என நினைத்து, தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு அவர் வந்தார். பின்னர் போலீஸ் நிலைய வாசலில் நின்று கொண்டு, ‘‘அய்யா, சாக்கு மூடையில் இருக்கிற எனது மனைவியை கொடுங்க சாமி’’ என்று கதறி அழுதார்.

இதனால் திகைத்துப்போன போலீசார் அவரிடம் என்ன? என்று விசாரித்தனர். விசாரணையில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா புதுப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் வெங்கடேசனும், அவருடைய மனைவியும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். அப்போது கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடேசனின் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த வெங்கடேசன், மனைவியை தேடி தமிழ்நாடு வந்துள்ளார்.

பின்னர் ஊர்ஊராக சென்று மனைவியை தேடி உள்ளார். அவரை கண்டு பிடிக்க முடியாததால், கடைசியாக திருப்பூர் புதிய பஸ் நிலையம் சென்று செல்போனில் பதிவு செய்து வைத்து இருந்த மனைவியின் புகைப்படத்தை காட்டி, அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், வெங்கடேசன் சொன்ன அடையாளங்களையும், தாராபுரத்தில் சாக்குமூடையில் பிணமாக இருந்த பெண்ணின் அடையாளங்களையும், பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் சரியாக இருப்பதாக நினைத்து, ‘‘ உங்களது மனைவியை சாக்கு மூடையில் கட்டியாச்சு, தாராபுரம் சென்று வாங்கிக்கொள், என்று கூறியதும், அதை கேட்டு அவர் தாராபுரம் வந்து இருப்பதும் தெரியவந்தது.

மேலும் வெங்கடேசன் சொன்ன அடையாளங்களும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளங்களும் ஓரளவுக்கு சரியாக இருந்ததால் போலீசாரே திடுக்கிட்டனர். அப்போது தனது மனைவி இறந்து விட்டாள் என நினைத்து துக்கத்தில் வெங்கடேசன் தரையில் விழுந்து அழுது புரண்டார். கண்ணீர் வடித்தார். அப்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தில் இருந்து கிடைத்த தங்க தாலியை காண்பித்து, உன் மனைவியின் கழுத்தில் கட்டிய தாலி இதுவா? என்று கேட்டார்.

வெங்கடேசன் அழுகையை நிறுத்தி விட்டு, தங்க தாலியை உற்றுப்பார்த்தார். பின்னர் அய்யா, இது என் மனைவி அணிந்து இருந்த தாலி இல்லிங்கையா, என்று சொல்லி விட்டு மீண்டும் அழத்தொடங்கினார். உடனே போலீசார் அவரை சமாதானம் செய்து, உன் மனைவி உயிருடன் இருப்பார் என்று ஆறுதல் கூறி, அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் வெங்கடேசன் சந்தோ‌ஷமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் நின்றவர்கள் கூறியதை கேட்ட வெங்கடேசன், தனது மனைவியை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்று சாக்கு மூடையில் கட்டி வைத்து இருப்பதாகவும், போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையத்தில் வைத்து இருப்பதாகவும் நினைத்து போலீஸ் நிலையம் சென்று சாக்கு மூடையில் உள்ள மனைவியை கொடுங்கள் என்று கேட்டது, இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா! என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.


Next Story