திருப்பூரில் கின்னஸ் சாதனை படைத்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


திருப்பூரில் கின்னஸ் சாதனை படைத்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 Oct 2018 11:30 PM GMT (Updated: 26 Oct 2018 7:52 PM GMT)

திருப்பூரில் விரல் நகத்தில் துளையிட்டு 22½ கிலோ பளுவை தூக்கி கின்னஸ் சாதனை படைத்த வாலிபர் குடிபோதையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நல்லூர்,

சென்னை, ஆவடி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் முரளிகண்ணன் (வயது50). இவரது மகன் ஹேமச்சந்திரன் (27). இவர் சிறுவயதில் இருந்தே ஏதாவது சாதனைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு முயற்சிகள் செய்து சாதனை படைத்து வந்தார். இதனால் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்று வந்தார்.

கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்து வந்த இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைவிரல் நகத்தில் துளையிட்டு 22½ கிலோ பளுவை 1 அடி உயரத்திற்கு 2 நிமிடங்கள் 4 வினாடிகள் தூக்கி வைத்திருந்து கின்னஸ் சாதனை படைத்தார். இதனால் இவரை பலரும் பாராட்டினார்கள். மேலும் இவர் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஏற்பட்டாளராகவும் இருந்து வந்தார்.

கடந்த 11 மாதங்களுக்கு முன்பு ஸ்வேதா (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நல்லூரில் இருந்து முத்தண்ணம்பாளையம் செல்லும் வழியில் உள்ள பொன்முத்து நகரில் ஒரு வாடகை வீட்டில் தம்பதி இருவரும் வசித்து வந்தனர். இந்தநிலையில் சில நாட்களாக நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் ஹேமச்சந்திரனுக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த ஸ்வேதா கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் ஊரக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தனசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹேமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருப்பூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கின்னஸ் சாதனை படைத்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டசம்பவம் நல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story