கஞ்சா வியாபாரியை வெட்டி கொல்ல முயற்சி 3 பேருக்கு வலைவீச்சு


கஞ்சா வியாபாரியை வெட்டி கொல்ல முயற்சி 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Oct 2018 2:45 AM IST (Updated: 27 Oct 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரிவாள் வெட்டு

தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்தவர் முத்துராஜ். இவருடைய மகன் செல்வகுமார் என்ற சபரி செல்வகுமார் (வயது 30). கஞ்சா வியாபாரி. அவ்வப்போது பெயிண்டிங் வேலையும் செய்து வந்தார். தற்போது இவர் தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது அக்காள் முத்துலட்சுமி வீட்டுக்கு சென்றார். அங்கு உறவினர்களிடம் பேசிவிட்டு, 10 மணிக்கு பின்னர் வீட்டுக்கு வெளியே வந்தார். அவர் வீட்டுக்கு சற்று தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, மது அருந்தி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேருக்கு வலை

இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ‘தூத்துக்குடியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அண்ணன் தம்பியான புகாரி மற்றும் சலீம் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதில் கஞ்சா வியாபாரியான சலீமும், சபரி செல்வகுமாரும் நண்பர்கள். இதனால் அந்த கும்பல், சபரி செல்வக்குமாரையும் தீர்த்துக்கட்ட கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த பின்னணியில் சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்த 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சபரி செல்வகுமார் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக அவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story