வைகை அணையிலிருந்து உரிய நீரை பெற்று கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை - கலெக்டர் தகவல்


வைகை அணையிலிருந்து உரிய நீரை பெற்று கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:15 AM IST (Updated: 27 Oct 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணையிலிருந்து உரிய பங்கீட்டு நீரை பெற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். வேளாண் துறை இணை இயக்குனர் சேகர் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதில் விவசாயிகள் சார்பில் சேங்கை மாறன், கன்னியப்பன், சந்திரன், ஆப்ரகாம், அய்யாசாமி, தண்டியப்பன், ஆறுமுகம், வீரபாண்டி, ஜோதிநாதன், முத்துக்கருப்பன், வழக்கறிஞர் ராஜா, பரத்ராஜா, கந்தசாமி, ரவி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:– தற்போது வைகை அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது. ஆகவே சிவகங்கை மாவட்டத்திற்குரிய பங்கீட்டு நீரைப் பெற்று வைகையாற்றின் வலது, இடது பிரதானக் கால்வாய்களில் உள்ள அனைத்து (கடைமடைப் பகுதி உள்பட) கண்மாய்களிலும் தண்ணீரை நிரப்ப வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மாவட்டத்தில் உள்ள கண்மாய்களுக்கு ஆறுகள் வழியாக தண்ணீர் பாயும் கால்வாய் மற்றும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இதேபோல் கண்மாய்கள், குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும்.

கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை மற்றும் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக பெற்றுத் தர வேண்டும். தவறும் பட்சத்தில் நடப்பாண்டு வேளாண் பணிகள் மேற்கொள்வதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது வங்கிகளிலிருந்து கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலை தர வேண்டிய நிலுவைத் தொகையை தீபாவளி பண்டிகைக்குள் பெற்றுத் தர வேண்டும்

தட்கல் முறையில் இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் குடிமராமத்து பணி மற்றும் கண்மாய், கால்வாய் சீரமைக்கும் பணிகளில் பல்வேறு நிலையில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. அவை குறித்து உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:– சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய் மற்றும் வாய்க்கால்கள், குளங்கள் ஆகியவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வைகை அணையிலிருந்து உரிய பங்கீட்டு நீரை பெற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதி வரை உள்ள அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை அடுத்த (நவம்பர்) மாதத்திற்குள் வழங்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.40 லட்சம் தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு சக்தி சர்க்கரை ஆலை வழங்க முன் வந்துள்ளது. விரைவில் அந்த தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும். தட்கல் முறையில் இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும்.

மாவட்டம் முழுவதும் உள்ள கண்மாய் மற்றும் கால்வாய்கள் குடிமராமத்து பணி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நிதியிலும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் குறைகள் அல்லது முறைகேடுகள் ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கலாம். அதுகுறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story