ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது - முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது என்று கோவையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கோவை,
தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு விழா கோவை ஈச்சனாரியில் உள்ள செல்வம் மஹாலில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க கோவை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிங்காநல்லூரில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தவர்களின் எண்ணங்கள் இன்றைக்கு தவிடுபொடியாகி உள்ளது. நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும், நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்க வேண்டும், தமிழக மக்களின் அத்தனை தேவைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டவர் எம்.ஜி.ஆர்.
இதற்காக அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கி தமிழகத்தில் 11 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி தந்தார். அவர் மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை முடக்க முற்பட்டார்கள். அதிலும் எதிரிகள் வெற்றி காணவில்லை. புரட்சி தலைவி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செயலாற்றி, பேரறிஞர் அண்ணா கண்ட கனவை நனவாக்கி 6 முறை தமிழகத்தின் முதல்- அமைச்சராக மகத்தான ஆதரவை பெற்று சிறப்பாக ஆட்சி செய்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு சில எட்டப்பர்கள் எதிரியோடு சேர்ந்து கொண்டு இந்த இயக்கத்தை உடைக்க முயற்சி செய்தார்கள். அதை மக்களின் துணையோடு ஜெயலலிதா தவிடுபொடியாக்கினார். ரத்தத்தை வியர்வையாக சிந்தி, தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களைச் சந்தித்து மீண்டும் தமிழகத்திலே எம்.ஜி.ஆர். ஆட்சியை உருவாக்கினார். எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க ஜெயலலிதா தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றினார்.
சில சதிகாரர்கள், எதிரியாய் இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை கொண்டு இயக்கத்துக்கு இடையூறுகளை விளைவித்தார்கள். ஆட்சிக்கு இடையூறு செய்தார்கள், இந்த ஆட்சியை அசைப்பதற்கு எவ்வளவோ திட்டம் தீட்டினார்கள். ஆனால் இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் அகற்ற முடியாது என்பதற்காக நல்ல தீர்ப்பு நமக்கு கிடைத்து இருக்கிறது. ஆகவே, இந்த இயக்கத்தை உடைக்க முற்பட்டவர்களும், ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டவர்களுக்கும் இறைவன் தகுந்த தண்டனையை இப்போது வழங்கியிருக்கிறான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை நாம் கட்டிக்காப்போம். புரட்சி தலைவி அம்மா அர்ப்பணித்து கொண்டு இந்த ஆட்சியை உருவாக்கிய அந்த தலைவிக்கு நன்றி தெரிவித்து அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். மக்களுக்கு நன்மை செய்வோம். அந்த இருபெரும் தலைவர்களுடைய ஆசியோடு நம்முடைய ஆட்சி சிறக்கும். கட்சி வலிமை பெறும்.உங்கள் அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற விதமாக இந்த அரசு செயல்படும். நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அத்தனையையும் நிறைவேற்றி கோவை மாநகர் ஒரு முதன்மை மாநகராக மாற்ற இந்த அரசு துணை நிற்கும். அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story