விக்கிரவாண்டி அருகே: குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


விக்கிரவாண்டி அருகே: குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:00 AM IST (Updated: 27 Oct 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி, 

தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி பகுதியில் 4 வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூரில் சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் அங்குள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தும் உடைந்தன. இதன் காரணமாக கப்பியாம்புலியூர் கிராம மக்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டனர். இருப்பினும் குழாய் உடைப்பை சரிசெய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 6.15 மணியளவில் அங்குள்ள மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குழாய் உடைப்பை விரைவில் சரிசெய்து தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும் போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் அனைவரும் காலை 6.45 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story