மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் - ஊட்டியில் 30-ந் தேதி நடக்கிறது


மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் - ஊட்டியில் 30-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 26 Oct 2018 9:30 PM GMT (Updated: 26 Oct 2018 10:02 PM GMT)

ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலாஜெமி சுசீலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:-

ஊட்டி,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில் 2018-2019-ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற 30-ந் தேதி ஊட்டி எப்ரான் பள்ளி மைதானம், அண்ணா உள்விளையாட்டு அரங்கு ஆகிய இடங்களில் நடக்கிறது.

இதில் கை, கால் ஊனமுற்றோருக்கான இறகுப்பந்து(ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில்) போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 5 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். டேபிள் டென்னிஸ்(ஒவ்வொரு அணியிலும் 2 வீரர், வீராங்கனைகள்), தடகளம்- 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், 100 மீட்டர் வீல்சேர் பந்தயம் ஆகியவையும் நடக்கிறது.

பார்வையற்றோருக்கு வாலிபால் போட்டி (ஒவ்வொரு அணியிலும் 7 வீரர், வீராங்கனைகள்) தடகளம்- 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நின்ற நிலையில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், டென்னிஸ் பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு எறிபந்து, தடகள போட்டிகள் நடத்தப்படுகிறது. காதுகேளாதோருக்கு கபடி(ஒவ்வொரு அணியிலும் 7 வீரர், வீராங்கனைகள்), தடகள போட்டிகள் நடக்கிறது.

இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஒவ்வொரு போட்டியாளரும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்று, மாவட்ட மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story