நெல்கொள்முதல் செய்ய சாக்கு தட்டுப்பாட்டை போக்கக்கோரி நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்கொள்முதல் செய்ய சாக்கு தட்டுப்பாட்டை போக்கக்கோரி தஞ்சையில் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் நெல் கொள்முதல் தடையின்றி செய்ய சாக்கு தட்டுப்பாட்டை போக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் சாக்கு இருப்பு வசதி, பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். தீபாவளி போனஸ் தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
பணிபுரியும் அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், சட்டப்படியான அகவிலைப்படியை 2015-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் சாமிக்கண்ணு, ஏ.ஐ. டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மாநில செயலாளர் பாலையன், மாநில துணைத்தலைவர் கணபதி, சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் தியாகராஜன் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story