ஊட்டியில் 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


ஊட்டியில் 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2018 3:30 AM IST (Updated: 27 Oct 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

ஊட்டி,

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஊதியக்குழு வரையறுத்துள்ள ஊதியத்தை சத்துணவு ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்குள் காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்ற 152 சத்துணவு ஊழியர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சத்துணவு ஊழியர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவதாஸ், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன், செயலாளர் ஆஷ்ரா, சத்துணவு அமைப்பாளர்கள் சிவலிங்கம், ஷீலா, கோபால் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் கூறியதாவது:-

சத்துணவு ஊழியர்கள் போராட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்கம் தார்மீக ஆதரவு அளித்துள்ளது. தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். சத்துணவு மையங்களுக்கு 50 கிராம் எடை கொண்ட கோழி முட்டைகள் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால் பல மையங்களுக்கு அனுப்பப்படும் முட்டைகள் 20 கிராம் எடை மட்டுமே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story