நவீன வசதிகளுடன் பொக்லைன் எந்திரம் வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி பெங்களூருவைச் சேர்ந்தவர் கைது
நவீன வசதிகளுடன் கூடிய பொக்லைன் எந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பரங்கிமலை பட்ரோட்டில் பொக்லைன் எந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருபவர் அப்துல்ரசாக் (வயது 52). இவருடைய நிறுவனத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய ‘ஹைட்ராலிக் எஸ்கலேட்டர்’ பொக்லைன் எந்திரம் வாங்க முடிவு செய்தார்.
இதற்காக பெங்களூரூவைச் சேர்ந்த யூனுஸ் பாஷா (47) என்பவரிடம் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும், யூனுஸ் பாஷா, பொக்லைன் எந்திரத்தை வாங்கிக்கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் அப்துல்ரசாக்கிடம் திருப்பி வழங்கவில்லை.
மேலும் பணத்தை திருப்பி கேட்டபோது அப்துல்ரசாக்கை, யூனுஸ்பாஷா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
கைது
இதுபற்றி பரங்கிமலை போலீசில் அப்துல்ரசாக் புகார் செய்தார். அதன்பேரில் யூனுஸ்பாஷா மீது பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் பரங்கிமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அரிஹரன், நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சென்னைக்கு வேலை விஷயமாக வந்த யூனுஸ் பாஷாவை பரங்கிமலையில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தசொகுசு காரையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான யூனுஸ் பாஷா மீது ஏற்கனவே நாக்பூர், பெங்களூரூ உள்பட பல நகரங்களில் பண மோசடி, கொலை மிரட்டல் உள்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story