மகன், மகளுடன் பணத்தகராறு: தீக்குளித்து பெண் தற்கொலை
பணம் கொடுக்கல், வாங்கலில் மகன் மற்றும் மகளுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த பெண், தனது வீட்டில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திரு.வி.க.நகர்,
சென்னை ஓட்டேரி பொன்னியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சக்குபாய் என்ற முத்துலட்சுமி (வயது 50). இவரது கணவர் பன்னீர்செல்வம் இறந்து விட்டார். இவர்களுக்கு ஈளவேந்தன் (34) என்ற மகனும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர்.
தமிழரசிக்கு திருமணமாகி ஓட்டேரி தேவராஜ் தெருவில் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். முத்துலட்சுமி தனது மகன் ஈளவேந்தனுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.
பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் முத்துலட்சுமிக்கும், அவருடைய மகன் மற்றும் மகள் ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தீக்குளித்து தற்கொலை
நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முத்துலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது நாசர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காதர் மீரா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், மகன், மகளுடன் ஏற்பட்ட பணத்தகராறில் மனம் உடைந்து முத்துலட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது முதல் கட்டவிசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story