டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தேவையற்ற இடங்களில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை
தேவையற்ற இடங்களில் குப்பைகளை கொட்டும் குடியிருப்புவாசிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை,
டெங்கு கொசு ஒழிப்பு பணி, துப்புரவு பணி மற்றும் நோய் தடுப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகை அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமை தாங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஆர்.லலிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி, தீவிர துப்புரவு பணி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனை நடந்தது.
குடிசை பகுதிகள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தீவிர துப்புரவு பணி மேற்கொண்டு குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும்போது குடியிருப்புவாசிகளிடம் கொசு புழு வளரும் இடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கையேடு, துண்டுபிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையிலும், தேவையற்ற இடங்களில் குப்பைகளை கொட்டும் குடியிருப்புவாசிகள் மீது சுகாதார துறை சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஹர்மந்தர் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story