நண்பர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு 5 பேர் கைது


நண்பர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு 5 பேர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2018 4:32 AM IST (Updated: 27 Oct 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

நண்பர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி

சென்னை கோயம்பேடு, மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ்(வயது 18). நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் அருகே இருந்த விக்னேஷை, அங்கு வந்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டது.

இதில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த விக்னேஷை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நண்பர் கொலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷின் காதலியை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான கணேஷ்(22) என்பவர் கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், கணேசுக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்தார். பின்னர் அவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்டுக்குளம் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த விக்னேஷ், திடீரென கணேஷின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் சாலையில் ரத்த வெள்ளத்தில் விழுந்த கணேஷ், அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

ஜாமீனில் வந்தார்

முதலில் விபத்து வழக்காக பதிவு செய்த போலீசார், பின்னர் நடத்திய விசாரணையில் கணேஷ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த விக்னேஷ், அதன்பிறகு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில்தான் நேற்றுமுன்தினம் அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

5 பேர் கைது

இந்தநிலையில் கணேஷின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க, அவருடைய தம்பி பிரகாஷ்(21) தனது நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷை வெட்டியது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து பிரகாஷ், அவருடைய நண்பர்களான மோகன்(25), அஜீத்(23), ஆரோக்கியம்(22), சாரதி(23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story