திருத்தணி அருகே ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்


திருத்தணி அருகே ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Oct 2018 5:00 AM IST (Updated: 27 Oct 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே கரும்பு, மாந்தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இதில் 3 செம்மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனபாதுகாப்பு படையின் வனச்சரக அலுவலர் மூர்த்தி தலைமையிலான வனபாதுகாப்பு படையினரும், ஆற்காடு வனச்சரக அலுவலர் கந்தசாமி தலைமையிலான வனத்துறையினரும் அம்மூர் காப்புக்காட்டிற்கு சென்று 3 செம்மரங்கள் வெட்டப்பட்டுள்ளதை கண்டனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது திருத்தணி அருகே தாடூர் என்ற பகுதியில் கரும்பு மற்றும் மாந்தோட்டத்தில் 1¼ டன் எடையுள்ள சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 55 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற வனபாதுகாப்பு படையினரும், வனத்துறையினரும் பதுக்கி வைத்திருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, ராணிப்பேட்டையில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் தலைமை வனப்பாதுகாவலர் சேவாசிங், வேலூர் மாவட்ட வன அலுவலர் பார்கவே தேஜா, உதவி வன பாதுகாவலர் ஈஸ்வரன், கவுரவ மாவட்ட வன உயிரின காப்பாளர் ரமேஷ்குமார் ஜெயின் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை பார்வையிட்டனர்.


Next Story