மாடி ஏறும்போது தவறி விழுந்த வாலிபர் சாவு
அரக்கோணத்தில் மாடி ஏறும்போது தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம், ஏ.பி.எம்.சர்ச் காலனி பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகன் குமார் (வயது 23). இவர் வீட்டின் மாடிக்கு படியில் ஏறி சென்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்தார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இது குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* மேல்விஷாரம் ஹாஜிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சபீர் (26) கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த அசேன்(24) என்பவரும் சக தொழிலாளர்களுடன் மேல்விஷாரம் அண்ணா சாலை பகுதியில் லாரி ஒன்றிலிருந்து கம்பிகளை இறக்கி வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சபீரை அசேன் அவதூறாக பேசி மிரட்டியுள்ளார் இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து அசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*ஆம்பூர் அருகே பச்சகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காந்தம்மாள் (வயது 80). இவர் நேற்று மாலை விறகு சேகரித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பச்சகுப்பம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் காந்தம்மாளின் காதில் அணிந்திருந்த கம்மலை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் காந்தம்மாளின் காது கிழந்தது. அவர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஆற்காடு கிளைவ்பஜார் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி(34) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் மோகன்(47) என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மோகன் மகாலட்சுமியை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story