திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு


திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 27 Oct 2018 5:25 AM IST (Updated: 27 Oct 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். உரம் விலை உயர்வை கண்டித்து காலி சாக்குகளுடன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பால்ராஜ், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமா மகேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்பார்வை பொறியாளர் அருள்மொழி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் பூ.விசுவநாதன் எழுந்து சென்று கலெக்டரிடம், “திருச்சி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் செய்யப்பட்டுள்ளது. காவிரி, கொள்ளிடத்தில் மணல் அள்ள அனுமதி அளிக்க கூடாது. முக்கொம்பு கொள்ளிடம் தடுப்பணையை விரைந்து கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்று கூறி சென்றார். அவருடன் விவசாயிகள் பலரும் வெளியே சென்று கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அனைவரும் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

இதேபோல் தமிழ்மாநில காங்கிரஸ் விவசாயபிரிவு மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் வந்த விவசாயிகள் உரம் விலை உயர்வினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், உரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் காலி உரசாக்குகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவ.சூரியன் பேசுகையில், “கூட்டுறவு சங்கங்களில் விற்கப்படும் குறிப்பிட்ட உரமூட்டைகளில் விலை அச்சிடப்படாமல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பழைய உரங்கள் புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசும்போது, “புள்ளம்பாடியில் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை திறக்கக்கோரி போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து, அவர்களுடைய டிராக்டர்களை வழக்கு ஆவணமாக பறிமுதல் செய்துள்ளனர். ஆகவே டிராக்டர் களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க துணை செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் பேசினார்கள்.

தொடர்ந்து கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:- விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிரை காப்பீடு செய்து அதன் பலன்களை பெற வேண்டும். திருச்சி மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 2018-19-ம் ஆண்டிற்கு கூட்டுறவு வங்கியின் மூலம் பயிர் கடன் வழங்குவதற்கு ரூ.317 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 ஆயிரத்து 885 விவசாயிகளுக்கு ரூ.125 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது, பயிர் கடன் தேவைப்படும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியின் மூலம் தொடர்ந்து வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் பயிர்கடன் பெறுவதில் சிரமம் இருக்கக் கூடாது. விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்க கூட்டுறவுத்துறை, வருவாய்துறை ஆகிய துறை அலுவலர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் 26 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 10,033 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு 12 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை 4 ஆயிரத்து 229 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story