பெண் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வழக்கில் விசாரணை: ரவுடி மோகன்ராம் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்- பாதுகாப்புக்கு வைத்திருந்ததாக வாக்குமூலம்
பெண் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வழக்கில் ரவுடி மோகன்ராமை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தபோது கிடைத்த தகவலையொட்டி, அவருடைய வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாகல்புதூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி மோகன்ராம் (வயது 40). இவர் மீது திண்டுக்கல்லில் 4 கொலை வழக்கு உள்பட மாநிலம் முழுவதும் 10 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், கடந்த 2015-ம் ஆண்டு கோவை சூலூரில் 3 பேரை வெட்டி கொலை செய்துவிட்டு மோகன்ராம் தலைமறைவாகிவிட்டார்.
இவரை, கடந்த 9-ந்தேதி மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, திண்டுக்கல்லில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் மோகன்ராமின் கூட்டாளி நரைமுடி கணேசன் கைதானார். அந்த வழக்கில், நரைமுடி கணேசனுக்கு துப்பாக்கி வழங்கிய மோகன்ராம் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பாலமுருகன், நேற்று ஒரு நாள் மட்டும் மோகன்ராமை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று திண்டுக்கல் தெற்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, நாகல்புதூர் 2-வது தெருவில் உள்ள தனது வீட்டில் ஒரு நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். உடனே, அவருடைய வீட்டுக்கு சென்ற போலீசார் அந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மோகன்ராம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
என் மீது திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் 3 கொலை வழக்குகளும், தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. மேலும், எனது நண்பருக்காக கோவை சூலூரில் 3 பேரை கொலை செய்தேன். இந்த வழக்குகளில் போலீசார் என்னை தேடி வந்ததால் தலைமறைவானேன்.
இதற்கிடையே, ஒரு வக்கீல் மூலமாக திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த நரைமுடி கணேசன் எனக்கு அறிமுகம் ஆனார். திண்டுக்கல்லில் நடைபெறும் விஷயங்களை அவர் எனக்கு செல்போன் மூலமாக தெரிவிப்பார். இதனால், நரைமுடி கணேசனை நம்பி என்னிடம் இருந்த 4 கைத்துப்பாக்கிகள் மற்றும் 56 தோட்டாக்களை அவரிடம் கொடுத்து வைத்திருந்தேன்.
இதேபோல வீட்டில் ஒரு பழமையான நாட்டுத்துப்பாக்கியையும் அனுமதி இல்லாமல் வைத்திருந்தேன். இவை அனைத்தையும் எனது பாதுகாப்புக்காகவே பதுக்கி வைத்திருந்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து நேற்று மாலை மீண்டும் திண்டுக்கல் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மோகன்ராம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். உடனே, மோகன்ராமை வேனில் ஏற்றி கோவை மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story