திம்பம் மலைப்பாதையில் ரோட்டை கடந்த சிறுத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
திம்பம் மலைப்பாதையில் ரோட்டை கடந்த சிறுத்தையை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தாளவாடி,
தாளவாடி அருகே அபாயகரமான 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. இது புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதால், அவ்வப்போது வனவிலங்குகள் குறிப்பாக சிறுத்தை சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், திம்பம் மலைப்பாதை 5–வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சிறுத்தை ஒன்று சாலையை கடந்து அருகே உள்ள ஒரு புதருக்குள் சென்றது.
இதனை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, சற்று தூரத்திலேயே தங்கள் வாகனத்தை நிறுத்திக்கொண்டார்கள். பின்னர் செல்போனில் சிறுத்தையை புகைப்படம் எடுத்தார்கள். அதன்பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இதுபற்றி சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இரவு வேளைகளில் சுற்றி திரிந்த சிறுத்தை தற்போது பகல் நேரங்களிலும் திம்பம் மலைப்பாதையில் சுற்றி திரிந்து வருகிறது. தற்போது பனி காலம் என்பதால், மலைப்பாதையில் சிறுத்தை நின்றால் கூட சரியாக தெரியாது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.