குன்னூரில் 8 மினி பஸ்களுக்கு அபராதம் ரூ.40 ஆயிரம் வசூல்


குன்னூரில் 8 மினி பஸ்களுக்கு அபராதம் ரூ.40 ஆயிரம் வசூல்
x
தினத்தந்தி 28 Oct 2018 4:00 AM IST (Updated: 27 Oct 2018 11:05 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்ட 8 மினி பஸ்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் தொலைதூர பயணத்துக்கு அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் நகர்புறங்களில் இருந்து குக்கிராமங்களுக்கு செல்ல தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி குன்னூர் தாலுகாவில் 30 மினி பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த மினி பஸ்கள் கிராமப்புறங்களில் அதிக ஒலி எழுப்பியவாறும், வேகமாகவும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ– மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்(அமலாக்கம்) நல்ல தம்பி தலைமையிலான அதிகாரிகள் குன்னூரில் இயக்கப்படும் மினி பஸ்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 8 மினி பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிவேகமாக இயக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 8 மினி பஸ்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. மேலும் மினி பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நல்ல தம்பி கூறும்போது, மினி பஸ்களுக்கு என தனி விதிமுறைகள் வகுத்து வழங்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இயக்கப்படும் மினி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.


Next Story