விழுப்புரத்தில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி: ‘திட்டமிடல் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’ மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை


விழுப்புரத்தில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி: ‘திட்டமிடல் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’ மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
x
தினத்தந்தி 28 Oct 2018 3:45 AM IST (Updated: 27 Oct 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

திட்டமிடல் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று விழுப்புரத்தில் நடந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை கூறினார்.

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். அதோடு, பிளஸ்-2 படிப்பிற்கு பிறகு எந்த படிப்பை தேர்வு செய்வது, வேலைவாய்ப்பு உள்ள படிப்புகள், ‘நீட்’ தேர்வு மற்றும் பொறியியல் படிப்பு கலந்தாய்வு பற்றியும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் மாணவிகள் அனைவரும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். வாழ்க்கையில் திட்டமிடல் அவசியம் வேண்டும், திட்டமிடல் இருந்தால் எல்லோரும் எளிதில் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று அறிவுரை வழங்கினார்.இதனை தொடர்ந்து மயிலம் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தில் கலந்துகொண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை பயமின்றி எதிர்கொள்வது எப்படி என்பதையும், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளையும் குறும்படம் மூலம் விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், உதவி தலைமை ஆசிரியர் சுமித்ராதேவி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, ஆசிரியர்கள் முருகன், ஞானப்பிரகாசம், ஜெயப்பிரகாஷ், ரவி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story