கல்லிடைக்குறிச்சி அருகே, குடிசைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு: பெண்கள் திடீர் சாலை மறியல் 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கல்லிடைக்குறிச்சி அருகே, குடிசைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு: பெண்கள் திடீர் சாலை மறியல் 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Oct 2018 3:00 AM IST (Updated: 28 Oct 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

கல்லிடைக்குறிச்சி அருகே குடிசைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பை, 

கல்லிடைக்குறிச்சி அருகே குடிசைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணிமுத்தாறு செல்லும் சாலையில் பொன்மாநகர் அமைந்துள்ளது. அங்கு ஒரு பகுதியில் பொத்தை அருகே சிலர் குடிசை அமைத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் வருவாய்த்துறையினர் அங்கு சென்று, அரசு புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி, அங்கு அமைக்கப்பட்டிருந்த சில குடிசைகளை அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் கல்லிடைக்குறிச்சி- மணிமுத்தாறு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரதாபன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தை

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்வி, செண்டம்மாள், ஜோதி ஆகிய 3 பேர் திடீரென தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.

அப்போது போலீசார் அவர்களிடம், உங்கள் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவியுங்கள் என்றனர். அதற்கு அவர்கள், இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த போலீசார், போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம். மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story