செங்கோட்டை அருகே மர்ம சாவில் துப்பு துலங்கியது தந்தையை கொன்ற மகன் கைது பரபரப்பு தகவல்


செங்கோட்டை அருகே மர்ம சாவில் துப்பு துலங்கியது தந்தையை கொன்ற மகன் கைது பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2018 3:00 AM IST (Updated: 28 Oct 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்த வழக்கில் துப்பு துலங்கியது. அவரை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி, 

செங்கோட்டை அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்த வழக்கில் துப்பு துலங்கியது. அவரை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி அடித்துக் கொலை

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சமுத்திரக்கனி (வயது 54). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது உடலை உறவினர்கள் கணக்கப்பிள்ளைவலசை மயிலாடும்பாறை அருகே உள்ள சுடுகாட்டில் புதைத்தனர். இந்த நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் இலத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், கடந்த 22-ந் தேதி தாசில்தார் வெங்கடாச்சலம், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் சமுத்திரக்கனியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில், சமுத்திரக்கனி அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மகன் கைது

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

சமுத்திரக்கனியின் மகன் சிவசங்கர் (வயது 33). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் சமுத்திரக்கனிக்கு பணம் அனுப்பி ஒரு தோப்பு வாங்கும்படி கூறினார். சமுத்திரக்கனியும் தோப்பு வாங்கி தனது பெயருக்கு பத்திரத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்த சிவசங்கருக்கும், சமுத்திரக்கனிக்கும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சிவசங்கர், சமுத்திரக்கனியை கம்பால் அடித்துக் கொலை செய்து உள்ளார். இவ்வாறு போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதையடுத்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story