கோர்ட்டு வழக்கு முடிவுக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடத்தப்படும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


கோர்ட்டு வழக்கு முடிவுக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடத்தப்படும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 28 Oct 2018 5:00 AM IST (Updated: 28 Oct 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு வழக்கு முடிவுக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடத்தப்படும் என்று திருப்பூரில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜனின் இல்ல திருமண விழாவின் வரவேற்பு நிகழ்ச்சி திருப்பூர்–காங்கேயம் ரோடு நாச்சிபாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை திருப்பூர் வந்தார். முன்னதாக வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. விஜயகுமார் எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருமண மண்டபத்திற்கு சென்ற அவர் அங்கு மணமக்களை சந்தித்து அவர்களை வாழ்த்தினார்.

இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மங்கலம் ரோட்டில் உள்ள குமரன் மகளிர் கல்லூரிக்கு சென்றார். கல்லூரியின் நிலை, நிர்வாக செயல்பாடு, மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து கல்லூரி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். மேலும், அதற்கான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து கல்லூரியில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், மாணவிகளின் தங்கும் விடுதிகள், சமையலறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். கல்லூரி மேம்பாட்டிற்கு என்னென்ன தேவை, நிதி உதவிகள் எவ்வளவு தேவைப்படும் என்றும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பழைய பொருட்களை மாற்றி, புதிய பொருட்களை பயன்படுத்தவும், மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அறிவுரை கூறினார். இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு குடிசை மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் ராஜசேகர், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், பட்டுலிங்கம், கருணாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று நெருப்பெரிச்சல் பகுதியில் தமிழ்நாடு குடிசை மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அங்கு 3 இடங்களில் 1,790 வீடுகள் ரூ.123¾ கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. அங்கிருந்த அதிகாரிகளிடம் குடியிருப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் காலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி வளர்ச்சிக்கான தேவைகள் குறித்து பேராசிரியர்கள், மாணவிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்தில் குடிசைகளற்ற நகராக மாற்றும் வகையில் 13 லட்சத்து 85 ஆயிரம் குடிசைகள் கண்டறியப்பட்டு படிப்படியாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. வருகிற 2023–ம் ஆண்டுக்குள் இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் 2021–ம் ஆண்டுக்குள் இலக்கை அடையும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இங்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளும் நல்ல தரமான முறையில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பணிகளை துரிதமாக முடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவருடைய வழியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் மக்கள் நலத்திட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அ.தி.மு.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எந்த தேர்தல் வந்தாலும், எதிரிகள், துரோகிகளிடம் இருந்து எந்த இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை சந்தித்து நாங்கள் வெற்றி பெறுவோம்.

தமிழகத்தில் 2 தடவை தொடர்ந்து வெற்றி பெற்று அ.தி.மு.க. அரசு நடக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டு சேர்ந்தும் கூட தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெற்று அ.தி.மு.க. அரசு நடந்து வருகிறது. 3 எம்.எல்.ஏ.க்களின் நிலை குறித்து விளக்கம் கேட்கும் உரிமை சபாநாயகருக்கு உள்ளது. அவர் விளக்கம் கேட்கலாம். உரிய பதில் கிடைக்காவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். கோர்ட்டில் உள்ள வழக்கு முடிவுக்கு வந்ததும் உறுதியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story