திருப்பூரில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
திருப்பூரில் உள்ள குளத்தில் பள்ளி மாணவன் ஒருவன் நீச்சல் பழக சென்ற போது நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
திருப்பூர்,
திருப்பூர் சூர்யாநகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் மதன்குமார் (வயது 12). இவன் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் மதன்குமார் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றுள்ளான். பின்னர் மதியம் ஆசிரியர்களிடம் அனுமதி பெறாமல் பள்ளியில் இருந்து தனது நண்பருடன் வெளியே சென்றுள்ளான்.
அவர்கள் இருவரும் குளத்துப்புதூரில் உள்ள குளத்திற்கு சென்று நீச்சல் பழக முடிவெடுத்தனர். இதையடுத்து இருவரும் அந்த குளத்தில் குதித்து விளையாடியுள்ளனர். ஒரு கட்டத்தில் கரையில் இருந்து நீருக்குள் குதித்த மதன்குமார் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மதன்குமாரின் நண்பர் கூச்சலிட்டுள்ளார். உடனடியாக இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் சென்று கூறியுள்ளான். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த பொதுமக்கள் குளத்தில் இறங்கி மாணவன் மதன்குமாரை தேடியுள்ளனர்.
ஆனால் அவர்களால் மதன்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குள் மதன்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் அங்கு திரண்டு வந்து கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் மூழ்கிய மதன்குமாரை தேடினார்கள். நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணிவரை தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதிக பரப்பளவில் குளம் இருப்பதாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் தேடுதல் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் இருந்தே மீண்டும் மதன்குமாரின் உடலை தேடும் பணி நடைபெற்றது. காலையில் சுமார் 8 மணியளவில் குளத்தில் இருந்து மதன்குமாரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவனது உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் நீச்சல் பழக சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியான பரிதாப சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.