திருப்பூர் மூளிகுளத்தில் ஆக்ஸிஜன் குறைப்பாட்டால் மீன்கள் செத்தன; மீன்வளத்துறை அதிகாரி தகவல்


திருப்பூர் மூளிகுளத்தில் ஆக்ஸிஜன் குறைப்பாட்டால் மீன்கள் செத்தன; மீன்வளத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2018 3:45 AM IST (Updated: 28 Oct 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மூளிகுளத்தில் ஆக்ஸிஜன் குறைப்பாட்டால் மீன்கள் செத்து மிதந்ததாக மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர்–ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையம் அருகே மூளிகுளம் உள்ளது. இதில் உள்ள மீன்கள் அனைத்தும் கடந்த 25–ந்தேதி திடீரென செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குளத்தின் தண்ணீர் மாதிரியை எடுத்து ஆய்வு செய்தனர். அருகே உள்ள பிரிண்டிங் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவு நீரால் மீன்கள் செத்து மிதந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். குளத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்துள்ளதும், இறந்த மீன் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில் மீன்கள் ஆக்ஸிஜன் குறைபாட்டால் செத்துள்ளதும் தெரியவந்துள்ளதாக திருப்பூரில் உள்ள மீன்வளத்துறை ஆய்வாளர் ஜாஸ்மின் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story