தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடமாடும் வாகன மருத்துவ முகாம்கள்


தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடமாடும் வாகன மருத்துவ முகாம்கள்
x
தினத்தந்தி 27 Oct 2018 10:15 PM (Updated: 27 Oct 2018 6:48 PM)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடமாடும் வாகன மருத்துவ முகாம்கள் கிராமங்கள்தோறும் நடத்தப்படுகின்றன.

தேனி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாகனங்களில் மருத்துவக் குழுவினர் கிராமங்கள்தோறும் சென்று மருத்துவ முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.

அதன்படி, நடமாடும் வாகன மருத்துவ முகாமின் தொடக்கமாக இந்த பணியில் ஈடுபடும் மருத்துவ வாகனங்கள் ஊர்வலம் தேனியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி இந்த ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மருத்துவ வாகனங்கள் கிராமங்களை நோக்கி கொண்டு செல்லப்பட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்துள்ளதாலும், வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்ய வாய்ப்பு உள்ளதாலும் மழைக் காலத்தில் தெருக்கள் மற்றும் இதர இடங்களில் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து கிராமங்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறையின் சார்பில் இன்று (நேற்று) முதல் வருகிற 31-ந்தேதி வரை ஒட்டுமொத்த சுகாதார பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஒரு நடமாடும் மருத்துவ வாகனம், 2 குழந்தைகள் நல பாதுகாப்பு வாகனம் என 3 வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் டாக்டர், செவிலியர், மருந்தாளுனர் ஆகிய 3 பேர் பணியாற்றுவார்கள். இவர்கள் தினமும் ஏதேனும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து மருத்துவ முகாம்களை நடத்துவார்கள். இந்த பணிகளை 8 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்பு, அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் நேரில் சென்று சிகிச்சை பெற வேண்டும். ரத்த பரிசோதனை மூலம் மட்டுமே டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த முடியும். எனவே, மக்கள் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு, தங்கள் வீடுகள் மற்றும் வீட்டுக்கு வெளிப்புற பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் ராஜாராம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story