கொடைக்கானல் அருகே காட்டெருமை முட்டியதில் பெண் பலி ஊராட்சி அலுவலகம் முன்பு உடலை வைத்து போராட்டம்


கொடைக்கானல் அருகே காட்டெருமை முட்டியதில் பெண் பலி ஊராட்சி அலுவலகம் முன்பு உடலை வைத்து போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2018 4:00 AM IST (Updated: 28 Oct 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே காட்டெருமை முட்டியதில் பெண் பலியானார். அவருடைய உடலை ஊராட்சி அலுவலகம் முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடி அருகே உள்ள பூலத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மனைவி காமுத்தாய் (வயது 65). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு காபி தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது புதரில் பதுங்கி இருந்த காட்டெருமை அவரை முட்டி தள்ளியது.

இதில் படுகாயம் அடைந்த காமுத்தாயை, அங்குள்ள தொழிலாளர்கள் மீட்டு பூலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடலை உறவினர் கள் பூலத்தூர் ஊராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்த பகுதியில் தொடர்ந்து காட்டெருமை அட்டகாசம் செய்து வருகிறது. காட்டெருமை அட்டகாசத்தை தடுக்காமல் வனத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக கூறி காமுத்தாயின் உறவினர்கள், பொதுமக்கள் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்பதில் பொதுமக்கள் பிடிவாதமாக இருந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த கொடைக் கானல் தாசில்தார் ரமேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி, பெரும்பள்ளம் வனச்சரகர் விஜயன் உள்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காட்டெருமை விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்க அப்பகுதியில் சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். மேலும் காமுத்தாயின் குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கினர்.

இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய பேராட்டம் இரவு 9.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story