தொடர்ந்து தண்ணீர் வரத்து: நீர்மட்டம் குறையாத வைகை அணை
தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பதால், வைகை அணையின் நீர்மட்டம் குறையாமல் உள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி ஆகும். ஆனால், அணையின் முழு கொள்ளளவாக 69 அடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து இருபோக பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக, வைகை அணையின் நீர்மட்டம் குறைந்தது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, இந்த ஆண்டில் 2-வது முறையாக கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டியது.
வைகை அணை கட்டப்பட்ட ஆண்டு முதல், ஒரே ஆண்டில் இரண்டு முறை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது இது 2-வது முறை ஆகும். ஏற்கனவே 1981-ம் ஆண்டு வைகை அணையின் நீர்மட்டம் ஒரே ஆண்டில் 2 முறை நிரம்பியது. தற்போது வைகை அணை நிரம்பி ஒரு வாரமாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாத நிலையிலும் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக முழு கொள்ளளவிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை பெய்யும் பட்சத்தில், வைகை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 417 கனஅடி வந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 5 ஆயிரத்து 571 மில்லியன் கனஅடியாக இருந்தது.
Related Tags :
Next Story