தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தினகரன் ஏமாற்றி விட்டார் வைகைசெல்வன் பேச்சு


தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தினகரன் ஏமாற்றி விட்டார் வைகைசெல்வன் பேச்சு
x
தினத்தந்தி 28 Oct 2018 4:00 AM IST (Updated: 28 Oct 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மணக்காடு பகுதியில் நடந்தது. அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட அஸ்தம்பட்டி பகுதி அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மணக்காடு பகுதியில் நடந்தது. அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வெங்கடாசலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைசெல்வன் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:- ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. தொண்டர்களை பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டதுடன், இரட்டை இலையையும் முடக்கினார்கள். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களை ஒருங்கிணைத்ததுடன் இரட்டை இலையையும் மீட்டார். தமிழகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள். டி.டி.வி. தினகரனுக்கு அரசியல் ஏதும் தெரியாது. அவர், 20 ரூபாய் கொடுத்து ரூ.10 ஆயிரம் தருவதாக உறுதி கூறி ஓட்டையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வருகிறார். இவர்களா தமிழகத்தை ஆள போகிறார்கள்?. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். பதவி தருவதாக கூறி அவர்களை தினகரன் ஏமாற்றி விட்டார். தினகரன் அணி ஒரு பிராய்லர் கோழி. இது முட்டையிடாது, குஞ்சு பொரிக்காது. கறிக்கு மட்டும்தான் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் செல்வராஜ், முன்னாள் துணை மேயர் நடேசன், மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.எஸ்.எம். பாலு, பொருளாளர் பங்க் வெங்கடாசலம், கூட்டுறவு வங்கி தலைவர்கள் துரைராஜ், பெரியபுதூர் கண்ணன், கே.சி.செல்வராஜ், மீனவர் அணி பிரிவு செயலாளர் ராமசாமி, சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story