ஜாக்டோ - ஜியோ சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்


ஜாக்டோ - ஜியோ சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2018 3:45 AM IST (Updated: 28 Oct 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(ஜாக்டோ-ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல்,

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(ஜாக்டோ-ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மலர்க்கண்ணன், பூபதி, நடேசன், வேல்முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமார் வரவேற்று பேசினார். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை செயலாளர் அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில சட்ட செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் நல்லதம்பி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் ரவீந்திரன், அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளனத்தின் தேசியகுழு உறுப்பினர் தம்பிராஜா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது 7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய மாற்றத்தில் 21 மாதகால நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானிய குழுவினை கலைக்காமல் பழைய நிலையே தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரிய, ஆசிரியைகள் கோஷங்களை எழுப்பினர். முடிவில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட அமைப்பு செயலாளர் செந்தில்செல்வன் நன்றி கூறினார்.

Next Story