பட்டாசு தொழிலை பாதுகாக்க முதல்–அமைச்சர் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பார் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


பட்டாசு தொழிலை பாதுகாக்க முதல்–அமைச்சர் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பார் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 28 Oct 2018 4:45 AM IST (Updated: 28 Oct 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு பட்டாசு வெடிக்கவும், உற்பத்திக்கும் சில கட்டுபாடுகளை விதித்துள்ள நிலையில் பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசி,

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லும் ஆரோக்கிய பாரத பயணம் என்ற விழிப்புணர்வு பிரசார இயக்கம் சிவகாசி வந்தது. இங்குள்ள தனியார் பள்ளிகளில் பிரசாரம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த இயக்கத்தினர் சிவகாசியில் இருந்து விருதுநகர் வழியாக மதுரை புறப்பட்டனர். இவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி சிவகாசி பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ரஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:–

உணவு வி‌ஷயத்தில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய உணவு பழக்க, வழக்கம் தற்போது மாறி உள்ளதால் தான் நாம் நோயாளியாக இருக்கிறோம். மேற்கித்திய காலசாரத்தை நோக்கி நாம் செல்வது மிகவும் ஆபத்தானது. 50 வயதுக்கு மேல் வந்து கொண்டிருந்த பெரும்பாலான நோய்கள் தற்போது 5 வயது குழந்தைகளுக்கு வருகிறது. அதற்கு காரணம் பாஸ்ட்புட் என்ற உணவும், ரசாயனங்களும் தான்.

குழந்தைகள் ஆர்வத்துடன் சாப்பிடும் பல உணவுகளில் தற்போது அதிகஅளவில் ரசாயனம் கலப்பு இருக்கிறது. இதை தவிர்த்து இயற்கை உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். இதை வலியுறுத்தி தான் இந்த பேரணி கன்னியாகுமரியில் இருந்து டெல்லியை நோக்கி செல்கிறது. யோகா செய்தால் உடலும், மனசும் புத்துணர்ச்சியாக இருக்கும். ஆயுள் காலம் நீடிக்கும். நான் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக யோகா செய்து வருகிறேன். ஆரோக்கியமாக இருக்க யோகாவை அனைவரும் செய்ய வேண்டும். குறிப்பாக மாணவர் சமுதாயம் யோகாவை கற்க முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்தை கடைபிடிப்போம் என உறுதி மொழி வாசிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராதாகிருஷ்ணன் எம்.பி., கலெக்டர் சிவஞானம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் சைக்கிள் ஓட்டி சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் தொற்று நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்கவும், டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் கிராமங்களுக்கு சென்று சிகிச்சை வழங்கவும் 44 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அடங்கிய வாகனங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன், மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ், சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ராம்கணேஷ், கமி‌ஷனர் அசோக்குமார், தொழிலதிபர் காளீஸ்வரி ஏ.பி.செல்வராஜன், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் அனுராதாஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:–

பட்டாசு தொழிலுக்கு பிரச்சினை ஏற்பட்ட போது அந்த பிரச்சினையில் இருந்து விடுபட தேவையான நடவடிக்கையை தமிழக அரசு செய்தது. குறிப்பாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டாசு தொழில் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை இல்லை என்ற தீர்ப்பு வந்ததை யொட்டி சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் முதல்–அமைச்சரிடம், பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறினார்கள். இதை முதல்–அமைச்சர் கவனமுடன் கேட்டுக்கொண்டார். பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை எடுத்து அந்த தொழிலை முதல்–அமைச்சர் கண்டிப்பாக பாதுகாப்பா£ர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story