மோட்டார்சைக்கிள் மோதி பலியான துப்புரவுப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ராஜபாளையத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பலியான துப்புரவுப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் ராஜபாளையம் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தார். கடந்த 2.8.15–ந் தேதி ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது ராம்சிங் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. அதில் படுகாயம் அடைந்த முருகன், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 8.8.2015–ந் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து இறந்தவரின் மனைவி முனியம்மாள் (44) மற்றும் மகன்கள் முனியசாமி (26), சடா முனீஸ்வரன் (20), தாய் லட்சுமி (70) ஆகியோர் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் மற்றும் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி டி.சம்பத்குமார், ராஜபாளயைத்தில் உள்ள தி நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், முருகனின் குடும்பத்தினருக்கு ரூ.22.12 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.