5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் சிவமொக்காவில் குமாரசாமி, தேவேகவுடா இணைந்து ஆதரவு திரட்ட முடிவு
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவமொக்காவில் குமாரசாமி, தேவேகவுடா இணைந்து ஜனதாதளம்(எஸ்) வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரு,
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவமொக்காவில் குமாரசாமி, தேவேகவுடா இணைந்து ஜனதாதளம்(எஸ்) வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர்.
இடைத்தேர்தல்
கர்நாடகத்தில் காலியாக உள்ள சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், அதுபோல, ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள், கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. இதனால் சிவமொக்கா, மண்டியா மற்றும் ராமநகர் தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்களும், பல்லாரி, ஜமகண்டி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.
இந்த 5 தொகுதிகளிலும் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. ஒட்டு மொத்தமாக 5 தொகுதிகளிலும் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவற்றில் ராமநகர் தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவியான அனிதா குமாரசாமி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதுபோல, சிவமொக்கா தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனான ராகவேந்திராவும், பல்லாரி தொகுதியில் ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தாவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த 3 தொகுதிகளில் யார்? வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குமாரசாமி பிரசாரம்
இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் வருகிற 1-ந் தேதி மாலையுடன் நிறைவு பெற உள்ளது. பகிரங்க பிரசாரம் முடிய இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதால், நேற்று இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), பா.ஜனதா கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் மண்டியா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் சிவராமேகவுடாவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் மண்டியா மாவட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். மண்டியா மாவட்டம் பாண்டவபுரா, கே.ஆர்.பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது சிவராமேகவுடாவை வெற்றி பெற வைக்கும்படி வாக்காளர்களிடம் முதல்-மந்திரி குமாரசாமி கேட்டுக் கொண்டார். குமாரசாமியுடன், மந்திரிகள் சா.ரா.மகேஷ், ஜி.டி.தேவேகவுடா, டி.சி.தம்மண்ணா, சி.எஸ்.புட்டராஜு உள்ளிட்டோர் சிவராமேகவுடாவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பல்லாரி தொகுதி
இதுபோல, பல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சாந்தாவுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்கு சாந்தாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஸ்ரீராமுலுவும், உக்ரப்பாவுக்கு ஆதரவு திரட்டி வரும் மந்திரி டி.கே.சிவக்குமாரும் ஒருவருக்கொருவர் பகிரங்க குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் சாந்தாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், நேற்று காலையில் எடியூரப்பா பல்லாரிக்கு சென்றார்.
பின்னர் அவர், பல்லாரி டவுன், ஒசப்பேட்டே, சண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாந்தாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். எடியூரப்பாவுடன், மத்திய மந்திரி ரமேஷ் ஜிகஜினகி, ஷோபா எம்.பி, ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் சாந்தாவுக்கு ஆதரவு திரட்டினார்கள். அதே தொகுதியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பாவுக்கு ஆதரவாக மந்திரிகள் டி.கே.சிவக்குமார், யு.டி.காதர் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தார்கள்.
சித்தராமையா ஆதரவு திரட்டினார்
பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆனந்த் நியாமகவுடாவுக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். அவர் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஜமகண்டி தொகுதியில் ஆனந்த் நியாமகவுடாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார். இதுபோன்று, மண்டியா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சித்தராமையாவுக்கு ஆதரவாக முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் நேற்று காலையில் இருந்து மாலை வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
சிவமொக்கா தொகுதியில் எடியூரப்பா மகனான ராகவேந்திரா மற்றும் பா.ஜனதா கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். ராமநகர் தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி ராமநகர் டவுன், புறநகர் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார்.
சிவமொக்காவில்...
இதற்கிடையில், சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை தோற்கடிக்கவும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் மதுபங்காரப்பாவின் வெற்றிக்காகவும் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் மதுபங்காரப்பாவுக்கு ஆதரவாக முதல்-மந்திரி குமாரசாமியுடன் இணைந்து தேவேகவுடாவும் பிரசாரம் செய்ய தீர்மானித்துள்ளார். அதன்படி, வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் முதல்-மந்திரி குமாரசாமியும், தேவேகவுடாவும் இணைந்து சிவமொக்கா தொகுதியில் மதுபங்காரப்பாவுக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர்.
இதுபோல, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் இணைந்து தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தீர்மானித்துள்ளனர். தலைவர்களின் சூறாவளி பிரசாரத்தால் கர்நாடகத்தில் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
Related Tags :
Next Story