விராலிமலையில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் கார் மோதி பலி பொதுமக்கள் சாலைமறியல்
விராலிமலையில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் கார் மோதி பரிதாபமாக இறந்தான். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தெற்கு ஆத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு பன்னீர் (7), ஸ்ரீதர் (4) மற்றும் கைக்குழந்தை ஒன்றும் உள்ளது. இதில் பன்னீர் விராலிமலையில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் பன்னீர் தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல நேற்றும் சிறுவன் பன்னீர் பள்ளிக்கு செல்வதற்காக புறப்பட்டான். இதையடுத்து பன்னீரை அவனது பாட்டி சிட்டு (55), தம்பி ஸ்ரீதர் ஆகியோர் வேனில் ஏற்றி விடுவதாக விராலிமலை தெற்கு ஆத்துப்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு சென்றனர். பின்னர் பள்ளி வேன் வந்தவுடன் பன்னீர் அதில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டான்.
இதையடுத்து சிட்டுவும், ஸ்ரீதரும் வீட்டிற்கு செல்வதற்காக ஆவூர்-விராலிமலை சாலையை கடக்க முயன்றனர். அப்போது ஆவூரில் இருந்து விராலிமலை நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக ஸ்ரீதர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். சிட்டு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதைக்கண்ட சிட்டு கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை தாசில்தார் லூர்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இப்பகுதியில் வேகதடை இல்லை. இதனால் தான் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஆவூர் அரசு மருத்துவமனை டாக்டர் யாசர் அரபத் (44) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story