டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்பட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்குவதற்காக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று காலையில் பரங்கிப்பேட்டை வந்தார். தொடர்ந்து அவர் பரங்கிப்பேட்டை பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்பட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க கடலூர், நாகை மாவட்டங்களில் 54 கிராமங்களை கையகப்படுத்தி விரைவில் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை முறியடிக்க பொதுமக்களாகிய நீங்கள் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம், ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனங்களுக்கு உரிமை கொடுத்துள்ளன.
அந்த நிறுவனங்கள் இப்பகுதியில் 219 கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறார்கள். இந்த மண்தான் உங்கள் அடையாளம். இந்த அடையாளத்தை அழிக்க மத்திய அரசு நினைக்கிறது. இந்த நிலங்களில் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க பா.ம.க அனுமதிக்காது. இந்த விஷயத்தில் அரசியல் பார்க்காமல் எனக்கு ஆதரவு கொடுங்கள். நீங்கள் ஆதரவு கொடுத்தால் உங்களுக்காக நான் போராடுவேன். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் பிச்சாவரம் வரையுள்ள கடலோர பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதோடு மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள். இந்த திட்டத்துக்கு முதலில் கையெழுத்து போட்டது தி.மு.க.தான். இந்த திட்டத்தை டெல்டா பகுதியில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
இதையடுத்து சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகில் நடைபெற்ற துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ம.க. இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சென்னை-சேலம் இடையேயான 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை யாரும் எதிர்க்கவில்லை. நான் தான் வழக்குப்போட்டு அந்த திட்டத்தை நிறுத்தியுள்ளேன். அதுபோல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை நிறுத்துவதற்காக தான் முதற்கட்டமாக துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளேன். அதற்காகவே இப்போது இந்த பயணத்தை நடத்துகிறேன். பா.ம.க. தவிர வேறு எந்த கட்சியும் இதுபோன்று செயல்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், முருகன், ஆறுமுகம், முத்துக்கிருஷ்ணன், மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா.அருள்மொழி, துணை பொதுச்செயலாளர்கள் அசோக்குமார், தாமரைக்கண்ணன், மாநில நிர்வாகிகள் சந்திரபாண்டியன், தேவதாஸ் படையாண்டவர், செல்வமகேஷ் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் சிட்டிபாபு, மாநில இளைஞரணி துணை செயலாளர் செல்வமகேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார், மாநில இளைஞரணி துணைத்தலைவர் மோகன், மாவட்ட துணை செயலாளர் வத்தராயன்தெத்து செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் மணியரசன், அதிபுத்திரன், சரண்ராஜ், சங்கர், சேத்தியாத்தோப்பு நகர தலைவர் ஜெய்சங்கர், துணை தலைவர் கலைமணி, அமைப்பு செயலாளர் மாணிக்கம், பசுமை தாயகம் நிர்வாகி அருள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் புவனகிரி, காட்டுமன்னார்கோவிலிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அன்புமணி ராமதாஸ் எம்.பி. பொதுமக்களிடம் வழங்கினார்.
Related Tags :
Next Story