நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 45 பெண்கள் உள்பட 60 பேர் கைது


நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 45 பெண்கள் உள்பட 60 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2018 4:15 AM IST (Updated: 28 Oct 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 45 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,
21 மாத கால நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடித்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் புகழேந்தி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இணை செயலாளர் சித்ரா வரவேற்றார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன் சேரல் கலந்துகொண்டு பேசினார்.

இந்தநிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 45 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நாகையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Next Story