திருச்சியில் நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி ரூ.1 கோடி கொள்ளை காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை
திருச்சியில் நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி ரூ.1 கோடியை காரில் வந்த மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
திருச்சி,
சென்னை பாரிமுனையில் ஏ.வி.எம். என்ற பெயரில் நிதி நிறுவனம் உள்ளது. இதன் கிளை அலுவலகம் திருச்சி பாலக்கரை மெயின்ரோட்டில் உள்ளது. இந்த அலுவலகத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த சுந்தரேசன்(வயது 55), மதியழகன்(50) ஆகியோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து ரூ.1 கோடியை தலா ரூ.50 லட்சம் வீதம் இரண்டு பேக்குகளில் வைத்து கொண்டு திருச்சிக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை தாம்பரத்தில் ஆம்னி பஸ்சில் ஏறி திருச்சிக்கு வந்தனர்.
அந்த பஸ் நேற்று அதிகாலை 5.20 மணிக்கு சென்னை-திருச்சி பைபாஸ்ரோட்டில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட், குட்ஷெட் மேம்பாலம் வழியாக திருச்சி தலைமை தபால்நிலையம் வந்தது. அப்போது நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேரும் தலைமை தபால் நிலையம் அருகே பஸ்சில் இருந்து இறங்கி பாலக்கரையில் உள்ள கிளை அலுவலகத்துக்கு நடந்து சென்றனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வெள்ளை நிற கார் ஒன்று வந்தது. காரில் டிரைவர் உள்பட 5 பேர் அமர்ந்து இருந்தனர். அவர்கள் திடீரென காரில் இருந்து கீழே இறங்கி நிதி நிறுவன ஊழியர்களான சுந்தரேசன், மதியழகன் ஆகியோரை கையால் தாக்கினர்.
பின்னர் அவர்கள் வைத்து இருந்த ரூ.1 கோடி உள்ள 2 பேக்குகளையும் பறித்து கொண்டு காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஊழியர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். காரில் வந்த மர்ம கும்பலின் அங்க அடையாளங்கள் குறித்தும், கார் எந்த திசையில் சென்றது என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்கள். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் காரின் வாகன பதிவு எண் பதிவாகி இருந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story