மனைவியை கணவரே வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கில் மாமியார் உள்பட 6 பேர் கைது


மனைவியை கணவரே வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கில் மாமியார் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2018 3:37 AM IST (Updated: 28 Oct 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை கணவரே வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் மாமியார்-2 சகோதரிகள் உள்பட 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அடையாறு,

சென்னை தரமணி கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது28). இவரது மனைவி சரண்யா (23,) இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ரவுடியான ராஜேஷ் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. ஒரு வழக்கில் கைதாகி ராஜேஷ் சிறையில் இருந்தார். அவரை ஜாமீனில் எடுக்க அவரது மனைவி சரண்யா முயற்சி செய்யவில்லை என தெரிகிறது. மேலும் அவரது நடத்தையிலும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ராஜேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மனைவி சரண்யாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை இரவு மனைவி சரண்யாவை திருவான்மியூர் அருகே அழைத்தார். அப்போது அங்கு வந்த சரண்யாவை அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக போலீசார் ராஜேசின் கூட்டாளியான வாத்து என்ற பார்த்தசாரதியை(24) ஏற்கனவே கைது செய்தனர். தப்பிய ராஜேஷ் உள்பட அவரது கூட்டாளிகள் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

மாமியார் கைது

இதற்கிடையே படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சரண்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அவரது மாமியாரும் கணவர் ராஜேசின் தாயாருமான வேளாங்கன்னி (55), கணவரின் சகோதரிகளான அனிதா(37), கவிதா(26) மற்றும் கூட்டாளிகளான விக்கி என்ற விக்னேஷ்(24), பிரபு (27), விமல்(24) ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கணவரை போலீஸ் தேடுகிறது

சரண்யாவை கொல்ல முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடுகிறார்கள்.

Next Story