திருவொற்றியூரில் குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததால் புகை மூட்டம் கண் எரிச்சல், மூச்சுதிணறலால் பொதுமக்கள் அவதி


திருவொற்றியூரில் குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததால் புகை மூட்டம் கண் எரிச்சல், மூச்சுதிணறலால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 28 Oct 2018 3:49 AM IST (Updated: 28 Oct 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததால் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் கரிமேடு பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகே ரெயில்வேக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. காலியாக உள்ள இந்த இடத்தில் சென்னை மாநகராட்சியும், தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதால் மலைபோல் குவிந்துள்ளது.

இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். தொடர்ந்து இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

கண் எரிச்சல்-மூச்சுத்திணறல்

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மலைபோல் குவிந்துள்ள குப்பையில் மர்மநபர்கள் யாரோ தீ வைத்து விட்டனர். இதனால் குப்பைகளில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது.

சாலைகளில் புகை மூட்டமாக இருந்ததால் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன், மூச்சு திணறல் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளானார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவொற்றியூர், மணலி பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அந்த குப்பைகளில் எரிந்த தீயை அணைத்தனர்.

Next Story