தார்டுதேவில் 23-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


தார்டுதேவில் 23-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 28 Oct 2018 4:30 AM IST (Updated: 28 Oct 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

தார்டுதேவில் 23-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை, 

தார்டுதேவில் 23-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்த வெள்ளத்தில் இளம்பெண்

மும்பை தார்டுதேவ் பகுதியை சேர்ந்தவர் அம்ரிஷ் கோத்தாரி (வயது48). இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 23-வது மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா (16). நேற்று முன்தினம் வெளியில் சென்றிருந்த பிரியங்கா இரவு 11.45 மணியளவில் வீடு திரும்பினார். அவருக்காக காத்திருந்த வீட்டு வேலைக்காரர் பிரியங்கா வந்ததும் கதவை திறந்து விட்டு தூங்க சென்று விட்டார்.

இந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் கட்டிட வளாகத்தில் பிரியங்கா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு காவலாளி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுபற்றி குடியிருப்புவாசிகளிடம் தெரிவித்தார்.

தற்கொலை

பதறி போன பிரியங்காவின் பெற்றோர் மற்றும் குடியிருப்புவாசிகள் பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள நாயர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பிரியங்கா 23-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இருப்பினும் அதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story