ஆஸ்பத்திரியில் இக்பால் கஸ்கருக்கு பிரியாணி விருந்து பாதுகாப்பு போலீசார் 5 பேர் பணி இடைநீக்கம்


ஆஸ்பத்திரியில் இக்பால் கஸ்கருக்கு பிரியாணி விருந்து பாதுகாப்பு போலீசார் 5 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 28 Oct 2018 4:45 AM IST (Updated: 28 Oct 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்பத்திரியில் இக்பால் கஸ்கருக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்ட சம்பவத்தில் பாதுகாப்பு போலீசார் 5 பேர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மும்பை, 

ஆஸ்பத்திரியில் இக்பால் கஸ்கருக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்ட சம்பவத்தில் பாதுகாப்பு போலீசார் 5 பேர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இக்பால் கஸ்கர்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் கஸ்கர் கட்டுமான அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதாகி தானே மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று கோர்ட்டு உத்தரவின் பேரில், அவர் ரத்த சர்க்கரை மற்றும் பல் சிகிச்சைக்காக தானே மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 10 மணி நேரம் ஆஸ்பத்திரியில் இருந்த அவர் தனது உறவினர்களை சந்தித்து பேசியுள்ளார்.

பிரியாணி விருந்து

அந்த நேரத்தில் அவருக்கு பிரியாணி விருந்தும் பரிமாறப்பட்டுள்ளது. தனக்கு இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தவர்களுக்கு அவர் ஆஸ்பத்திரியில் பணம் வினியோகம் செய்து உள்ளார். இது அனைத்தும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முன்னிலையிலேயே நடந்து உள்ளது.

மேலும் இது ஸ்டிங் ஆபரேஷன் எனப்படும் ரகசிய நடவடிக்கை மூலம் படம் பிடிக்கப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வீடியோ காட்சியில் மேற்கண்ட நிகழ்வுகளுடன் இக்பால் கஸ்கர் ஆஸ்பத்திரியில் சிகரெட் புகைத்தபடி உலாவும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளன.

5 போலீசார் பணி இடைநீக்கம்

இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்தின் போது, இக்பால் கஸ்கரின் பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீசாரை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து தானே இணை போலீஸ் கமிஷனர் மதுக்கர் பாண்டே உத்தரவிட்டு உள்ளார்.

Next Story