சென்னம்பட்டி சேமிப்பு குடோனில் நெல், அரிசி மூட்டைகளுடன் வாரக்கணக்கில் காத்திருக்கும் லாரிகள் எடைபோடும் நிலையம், சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் அவதி
தஞ்சை அருகே சென்னம்பட்டி சேமிப்பு குடோனில் நெல், அரிசி மூட்டைகளுடன் வாரக்கணக்கில் லாரிகள் காத்திருக்கின்றன. மேலும் இந்த குடோனுக்கு செல்ல சாலை வசதிகளும் இல்லை, எடைபோடும் நிலையமும் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நெல் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தஞ்சையில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப் படும்.
மேலும் வெளிமாவட்டங்களுக்கு லாரிகள், ரெயில்கள் மூலமும் அரவைக்கு நெல் அனுப்பப்படும். இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகளுக்கும் நெல் அரவைக்கு அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்படும் அரிசி நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான சேமிப்புக்கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும்.
இதற்காக தஞ்சை மாவட்டத்தில் விமான படை தளம் அருகே, சென்னம்பட்டி, புனல்குளம், சந்தனக்குடோன் ஆகிய இடங் களில் 4 குடோன்கள் உள்ளன. இதில் சென்னம்பட்டியில் உள்ள சேமிப்புகுடோன் 39 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்டது. இந்த குடோன் ரூ.44 கோடியே 72 லட்சம் மதிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. சென்னம்பட்டியில் மட்டும் நெல், அரிசி மூட்டைகளை வைப்பதற்காக 15 பெரிய அளவிலான கட்டிடங்கள் உள்ளன.
இந்த சென்னம்பட்டி சேமிப்பு குடோனுக்கு செல்வதற்கு சாலைவசதி இல்லை. மண்சாலையாக காணப்படுகிறது. மேலும் இந்த சாலை அருகே சில இடங்களில் பல அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டு உள்ளது. இதனால் லாரிகள் எச்சரிக்கையுடன் சென்று வருகின்றன. குடோன் செயல்பட தொடங்கியதில் இருந்து இதுவரை சாலைவசதி ஏற்படுத்தப்படவில்லை. அதையும் மீறி லாரிகளில் நெல், அரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டால், சேமிப்புக்கிடங்கில் உடனடியாக இறக்கப்படவில்லை.
இதனால் லாரிகள் நெல், அரிசி மூட்டைகளுடன் வாரக்கணக்கில் காத்துநிற்கின்றன. இது குறித்து கேட்டால் குடோனில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் தான் இறக்குவதில் தாமதம் என கூறுகிறார்கள். இதனால் டிரைவர்கள், கிளனர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றன. மேலும் இந்த குடோனில் எடைபோடும் நிலையம் இல்லை. இங்கு 50-க்கும் மேற்பட்ட மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர்.
இதனால் விமான நிலையம் அருகே உள்ள குடோனில் லாரிகள் எடைபோடப்பட்டு சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள சென்னம்பட்டி குடோனுக்கு செல்கிறது. அங்கு 4 அல்லது 5 நாட்கள் லாரி காத்து நின்ற பின்னர் இறக்க செல்லும் போது, அங்குள்ள அதிகாரிகள் மீண்டும் எடைபோட சொல்கிறார்கள். இதனால் மீண்டும் எடைபோடும் நிலையத்துக்கு சென்று வர வேண்டி உள்ளது.
சென்னம்பட்டி குடோன் அருகே எடைபோடும் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது பயன்படுத்தாமல் இருக்கிறது. இதே போல் மற்ற குடோன்களிலும் லாரிகள் 4 முதல் 5 நாட்கள் வரை காத்துக்கிடக்கின்றன. அங்கும் இறக்குவதில் தாமதம் ஏற்படுகின்றன. மேலும் குடோனில் குறைந்த அளவே தினமும் லாரிகளில் இருந்து மூட்டைகள் இறக்கும் பணியும், ஏற்றும்பணியும் நடைபெறுவதால் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வருவாய் இன்றி சிரமப்படுகிறார்கள்.
தினமும் 50 லாரிகள் வரை இறக்கும் இடத்தில் தற்போது 15 முதல் 20 லாரிகள் மட்டும் இறக்கப்படுகின்றன. ஆனால் சென்னம்பட்டி குடோனுக்கு மட்டும் வெளியில் இருந்து 40 முதல் 50 லாரிகளில் மூட்டைகள் வருகின்றன.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சென்னம்பட்டி குடோனில் எடைபோடும் நிலையம் அமைப்பதோடு, சாலை வசதியும் செய்து தர வேண்டும். மேலும் தினமும் லாரிகள் தேக்கம் அடையாமல் அனைத்து குடோன்களிலும் மூட்டைகளை ஒன்று அல்லது 2 நாளில் ஏற்றி இறக்க வசதி செய்து கொடுப்பதோடு, குடோனில் ஆட்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
Related Tags :
Next Story