கோபியில் டெங்கு ஒழிப்பு பணி: வீடுகளில் கலெக்டர் ஆய்வு
கோபியில் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் கதிரவன் வீடுகளிலும் சோதனை செய்தார்.
கடத்தூர்,
கோபியில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று கோபி நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் கதிரவன் கலந்துகொண்டார். பின்னர் அவர், கோபி சிலேட்டர் ஹவுஸ்வீதி, கீரிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கீரிப்பள்ளம் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்ற கலெக்டர் கதிரவன், வீட்டின் உள்ளே மற்றும் வெளியே உள்ள குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் ஒரு வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் ‘டார்ச் லைட்’ அடித்து பார்த்தார். அப்போது அந்த குடிநீர் தொட்டியில் ஏடிஎஸ் புழுக்கள் மிதந்தன. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் உரிமையாளர்களிடம் குடிநீர் தொட்டிகளில் தண்ணீரை தேக்கி வைக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து புழுக்கள் மிதந்த குடிநீர் தொட்டியில் ‘அபேட்’ மருந்து தெளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.
அப்போது கலெக்டருடன் நகராட்சி ஆணையாளர் சுதா, பொறியாளர் பார்த்திபன் உள்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.