பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை


பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை
x
தினத்தந்தி 29 Oct 2018 4:30 AM IST (Updated: 28 Oct 2018 10:28 PM IST)
t-max-icont-min-icon

விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெரம்பலூர்,
தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் ராயபுரத்தை சேர்ந்த முனியமுத்து மகன் தஷ்வின் (வயது 4) என்ற சிறுவன், கடந்த சில நாட்களாக விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதனால் பதறிப்போன முனியமுத்து, தஷ்வினை அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவனுக்கு விஷ காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் அவன் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதேபோல, பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 தாலுகாக்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருக்கிறதா? என பரிசோதனை செய்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

கொசுக்கள் கடிப்பதால்தான் காய்ச்சல் ஏற்படுகிறது. ஆகவே, கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்று நோயாளிகளிடம் டாக்டர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.


Next Story