தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும் டி.டி.வி. தினகரனுடன் கருத்து வேறுபாடு இல்லை - தங்கதமிழ்செல்வன் பேட்டி
‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும், டி.டி.வி.தினகரனுடன் கருத்து வேறுபாடு இல்லை‘ என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.
ஆண்டிப்பட்டி,
‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும், டி.டி.வி.தினகரனுடன் கருத்து வேறுபாடு இல்லை‘ என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.
ஆண்டிப்பட்டி 13-வது வார்டு காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்துகொண்டார். அப்போது நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் நிற்க தடை இல்லை. இதுகுறித்து நீதிமன்ற உத்தரவில் கூறப்படவில்லை. 18 எம்.எல்.ஏ.க்களுக்கும், எங்கள் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. நாங்கள் குற்றமற்றவர்கள், எங்கள் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறோம். இடைத்தேர்தலில் அ.ம.மு.க.வே வெற்றி பெறும்.
எங்களை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர அழைத்திருப்பது காலம் கடந்த ஞானம். நாங்கள் எம்.எல்.ஏ.வாக இருக்கும் போதே அவர்களுடன் இணையவில்லை. இப்போது பதவியை பறித்து கொண்ட பிறகு எதற்காக போகப் போகிறோம். அவர்கள் வேண்டுமானால் எங்களோடு இணையட்டும். அதற்கான காலம் வரும்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கின் விசாரணை வருகிற 30-ந் தேதி வருகிறது. அந்த வழக்கில் தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வரக்கூடிய சூழல் இருப்பதால், எங்களை அ.தி.மு.க.வுக்கு வாருங்கள், ஒன்று சேர்ந்துவிடலாம் என்று கூறி வருகின்றனர். ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு ரூ.15 கோடி செலவில் குடிநீர் திட்டப்பணிகள் முடிந்தும் இன்னும் செயல்படுத்தவில்லை. குமுளியில் பஸ்நிலையம் அமைக்க முயற்சி எடுத்தேன். அதனை கிடப்பில் போட்டனர். வருகிற 10-ந் தேதி ஆண்டிப்பட்டி தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து நடைபெற உள்ள உண்ணாவிரதம் திட்டமிட்டபடி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஸ்டார் ரபீக், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story