புதுக்கோட்டையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை அதிகாரி ஆய்வு
புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் காளிமுத்து ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை,
மழைகாலம் தொடங்கி உள்ளதால், புதுக்கோட்டை நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு உருவாகும் ஆதாரங்களை அழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது நகராட்சி பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் மட்டை, டயர், உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் பெரியார் நகர், ராஜகோபாலபுரம் பகுதியில் நடைபெற்ற டெங்கு கொசு உற்பத்தி காரணிகளை அழிக்கும் பணியை, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் காளிமுத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், சாக்கடைகளில் மருந்து அடித்தல், தனிநபர் வீடுகளுக்கு சென்று டெங்கு கொசு உருவாகும் காரணிகளை கண்டறிந்து அழித்தல் உள்ளிட்ட பல்வேறு கொசு ஒழிப்பு பணிகளை பார்வையிட்டார்.
அப்போது, புதுக்கோட்டை நகர் பகுதிகளில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். தனிநபர் இல்லங்களில் டெங்குகொசு உருவாகும் லார்வா புழுக்களை கண்டறியும் பணியினை மேற்கொண்டு, அவற்றை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார்.
தொடர்ந்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் காளிமுத்து நிருபர்களிடம் கூறுகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைவாக உள்ளது. நகராட்சித்துறை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகராட்சியில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்கள் கண்டறியப்படும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், உதவி பொறியாளர் சீமா, துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா உள்பட நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story