தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: 20 அமைப்புகளின் நிர்வாகிகள் விவரங்களை சி.பி.ஐ. சேகரிப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு தொடர்பாக 20 அமைப்புகளின் நிர்வாகிகள் விவரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு தொடர்பாக 20 அமைப்புகளின் நிர்வாகிகள் விவரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு, அதனை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக 20 அமைப்பினர் மீது சென்னை சி.பி.ஐ. 15 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் துணை சூப்பிரண்டு ரவி உள்ளிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 13-ந் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விசாரணை நடத்துவதற்கு வசதியாக தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் சி.பி.ஐ. தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விவரங்கள் சேகரிப்பு
ஏற்கனவே துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தற்போது, போராட்டத்தில் பங்கேற்ற 20 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வழக்கு தொடர்பு உள்ளவர்களை சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அந்த 20 அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்கள் குறித்த விவரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதனால் சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்து உள்ளது.
Related Tags :
Next Story